சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்

அத்திவரதர் உச்சத்தில் இருந்த காலகட்டத்திலேயே இந்த சோமநாதர் கோவில் குறித்துப் பதிவிட நினைத்தேன்.

ஆளுநர் ரவி அதற்கானத் தேவையை தற்போது உருவாக்கிவிட்டார்.
______

பிராமணியம் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பயன்படுத்தி அவர்களைக் கட்டுப்படுத்தவும் சுரண்டவும் செய்தது என்பதற்கான சிறந்த உதாரணம் குஜராத்தின் சோமநாதர் கோவிலில் உள்ள மிதக்கும் சிவலிங்கச் சிலை. மனித வரலாற்றின் குறிப்புகளில் தொடர்ந்து மக்களின்மீது மோசடியாகத் திணிக்கப்பட்டுவரும் பல தந்திரங்களின் மூலம் மக்களின் செல்வத்தையும் கண்ணியத்தையும் கொள்ளையடிக்கும் முயற்சிகளில் சோமநாத சிலைத் தந்திரம் மிக வெற்றிகரமான, தனித்துவமான ஒன்றாக இருக்கின்றது.
அறிவியல்ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஒரு மிதக்கும் காந்தசக்தி தொழில்நுட்பத்தின் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், அச்சிலை அதன் தெய்வீகத்தன்மை காரணமாகத் தானே அந்தரத்தில் மிதப்பதாகத் தவறாகச் சித்திரித்தனர். இந்த அதிசயத்தைக் கட்டணம் செலுத்திக் காண்பதற்காக பக்தர்கள் வெகுதொலைவிலிருந்து வந்தனர்.

இருப்பினும், கிபி 1024-ல் சுல்தான் முகமது கஜினியின் படை அக்கோவிலைக் கைப்பற்றியபோது அச்சிலையின் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டது. அதே நேரம், பாரசீக விஞ்ஞானி சக்காரியா-அல்கஸ்வினி அச்சிலையைக் குறித்தும் அதன் விதி குறித்தும் இவ்வாறு எழுதுகிறார்,
கீழிருந்து தாங்கிப் பிடிக்கவும், மேலிருந்து தொங்க விடவும் எந்தவித ஆதாரமும் இன்றி அச்சிலை கோவிலின் நடுவே அந்தரத்தில் வீற்றிருந்தது. இந்துக்களால் அது பெருமதிப்புடன் ஆராதிக்கப்பட்டது; இஸ்லாமியனோ, நாத்திகனோ, அந்தரத்தில் மிதக்கும் அச்சிலையைக் கண்ட எவரும் திகைப்பில் மூழ்கினர்...

விலையுயர்ந்த அனைத்துப் பொருட்களும் காணிக்கையாகக் கொண்டு வரப்பட்டன, மேலும் பத்தாயிரத்துக்கும் அதிகமான கிராமங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட வரிகள் அக்கோவிலுக்கு மானியமாக அளிக்கப்பட்டன. அங்கு கங்கை என்னும் ஒரு நதி இருந்தது; அது மிகப் புனிதமானதாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. அந்த நதியிலிருந்து தினமும் நீரைக் கொண்டுவந்து அவர்கள் சோமநாதர் கோவிலைக் கழுவினர். அந்தச் சிலையின் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யவும், வருகின்ற பார்வையாளர்களைக் கவனிக்கவும் பிராமணர்கள் ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர்; மேலும் அதன் வாசலில் பாடவும், ஆடவும் ஐநூறு இளம்பெண்கள் நியமிக்கப்பட்டனர். இவை எல்லாம் கோவிலுக்கு அளிக்கப்பட்ட மானியங்களின் மூலம் பராமரிக்கப்பட்டது. தேக்கு மரத்தால் செய்யப்பட்ட ஐம்பத்தாறு தூண்களின்மேல் காரீயம் பூசப்பட்டு, கம்பீரமான கட்டடம் எழுப்பப்பட்டது...

கஜினி முகமது தன்னுடன் இருந்தவர்களிடம், அந்தச் சிலையின் அற்புதம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும், எவ்விதத் துணையோ ஆதாரமோ இன்றி அது காற்றில் நிற்பது குறித்தும் கேட்டார். பலர், அது ஒரு மறைக்கப்பட்ட பொருளின் துணை கொண்டே நிற்கக்கூடும் என்றே கூறினர். அரசன் ஒரு நபரை அனுப்பி அச்சிலையின் மேலும் கீழும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒரு ஈட்டியைக் கொண்டு துழாவிப் பார்க்குமாறுப் பணிக்க, அவ்வாறு செய்தும் எதுவும் தட்டுப்படவில்லை. ஒரு பணியாளர், அந்த விதானம் இரும்புக் கனிமத்தாலான எடைக்கல்லால் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், சிலை இரும்பினால் செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தன் கருத்தைக் கூறினார். மேலும், சாமர்த்தியமான அந்தக் கட்டட நிபுணர் மிகத் திறமையாகத் திட்டமிட்டு, காந்தம் ஒன்றினை அதன் ஏதாவது ஒரு பக்கத்தில், அதன் எடைக்கும் கூடுதலான விசையைச் செலுத்தாதவாறு வடிவமைத்த காரணத்தால் சிலையை அந்தரத்தில் நிறுத்த முடிந்ததாக அந்தப் பணியாள் கூறினார். சர்ச்சையைத் தீர்க்க சுல்தானின் அனுமதியுடன் விதானத்தின் மேலிருந்து சில கற்கள் நீக்கப்பட்டன. உச்சியிலிருந்து இரண்டு கற்கள் நீக்கப்பட்டபோது, சிலை ஒரு பக்கமாக சாய்ந்தது. மேலும் கற்கள் நீக்கப்பட்டபோது அது இன்னும் அதிகமாகச் சாய்ந்தது; தொடர்ந்து கற்கள் நீக்கப்பட, கடைசியில் அது தரையில் போய் நிலைகொண்டது.

மனித அறிவுத்திறன் எப்படி இவ்வாறான ஒரு சூழ்ச்சிக்கு எளிதாக இரையாகிறது? மக்கள் இத்தகைய மோசடித்தனங்களுக்கு எளிதான இலக்காக இருப்பதற்குக் காரணம், அவர்கள் மீது சுமத்தப்பட்ட சாதிமுறை அவர்களுக்கு அடிப்படைக் கல்வியைக் கூட தர மறுத்ததேயாகும். சாதியச் சட்டத்தின்படி அவர்கள் கல்வி பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கல்வியும் சமஸ்கிருத மொழியில் பாதுகாக்கப்பட்டுள்ளது. கிபி 17-ஆம் நூற்றாண்டில் முகலாய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஃப்ரெஞ்ச் மருத்துவர் ஃபிரான்சுவா பெர்னியர் கூறுவதுபோல, சமஸ்கிருதம் ‘பரிசுத்தமான மொழி’ என்று அடையாளப்படுத்தப்பட்டது. பிராமணர்கள் அதை ‘மிகத் தொன்மையான தெய்வீகமான மொழி’ என்றார்கள்; “அது பண்டிதர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு மொழி என்றும் சொன்னார்கள்.
அம்மொழி ஹிந்துஸ்தானத்தில் பொதுவாகப் பேசப்பட்ட மொழிகளிலிருந்து முற்றிலும் வேறாக இருந்தது.” எல்லா ஞானமும் பூட்டு சாவிகளுக்கு அடியில் தாழிடப்பட்டு கிடக்க, பொதுமக்கள் மிகப்பெரும் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்தனர்.

- பஜன்சிங் எழுதிய Captivating the Simple-hearted: A struggle for dignity in the Indian Subcontinent.
தமிழில்: குருதியில் பூத்த மலர்கள், Discovery Publications வெளியீடு.

என்ற வரலாற்று நூலிலிருந்து..

*பகிர்வு:-*
S சுரேஷ்குமார் M.A,B.L.,
அட்வகேட்
விருத்தாசலம்
கைபேசி:-9843837999.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12