அமைதியான பிள்ளையார் ஆயுதம் ஏந்தியது எப்படி? நாகை மாலி


பிள்ளையாரின் தோற்றம் குறித்துத் தமிழக மக்களிடம் ஏராளமான, சுவாரசியமான கதைகள் உண்டு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் கேட்டு மகிழ்வர். இவ்வாறான ரசனைக்குரிய ஒரு தெய்வம் தான் பிள்ளையார்.தென் மாவட்டங்களில் கரிசல் நிலப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யாவிட்டால், வெட்ட வெளியில் இருக்கும் பிள்ளையார் சிலை மீது, மிளகாய்வற்றலை அரைத்துப் பூசி விடுவார்கள். சில இடங்களில்,சாணியைக் கொழகொழவென்று கரைத்துப் பிள்ளையார் சிலை மீது ஊற்றி விடுவார்கள். மிளகாய் வற்றல் பூச்சையோ அல்லது சாணிக் கரைசலையோ போக்குவதற்காகப் பிள்ளையார் மழையை வரவழைப்பார் என்ற நம்பிக்கையில், இத்தகையச் செயலை கிராம மக்கள் செய்வர். மழை பெய்யும் வரை, இப்பூச்சுகள் பிள்ளையார் மீது அப்படியே படிந்திருக்கும்.சில இடங்களில் பிள்ளையாரைக் குப்பைக் குழியில் புதைத்து வைப்பார்கள். மழை வந்த பிறகே புதைத்த பிள்ளையாரை வெளியில் எடுப்பார்கள். சில இடங்களில் கிணற்றுக்குள் போட்டுவிடுவார்கள். மழை பெய்தால் தான் வெளியில் எடுப்பார்கள். மக்கள் தங்களுக்கு நெருக்கமானவராகப் பிள்ளையாரைக் கருதினார்கள். அதனால், மிகுந்த உரிமையுடன் இப்படிப்பட்ட தண்டனைகளை மக்கள் அவருக்கு வழங்குவார்கள்.எளிய மக்களின் தெய்வமாகப் பிள்ளையார் திகழ்ந்தார் என்பதற்கு இவை சாட்சியங்களாக விளங்குகின்றன. இப்படி எளிய மக்களின் வழிபாட்டுத் தெய்வமாகத் திகழ்ந்த பிள்ளையாரைக் காலப் போக்கில், பிராமணிய சமயம், தன்னுள் இணைத்துக் கொண்டது. பழங்குடிகளின் ‘குலக்குறி’ என்ற தொடக்கக் கால அடையாளம் மறைந்து, பிராமணியச் சமயக் கடவுள் வரிசையில் பிள்ளையார் இடம் பெற்றார். சிவனுடன் தொடர்புபடுத்தப்பட்டார். பிள்ளையாரைத் துதிக்கும் வழிமொழி சுலோகங்கள் பிராமணியத்தால் உருவாக்கப்பட்டன. எளிமையாகக் காட்சியளித்த பிள்ளையாருக்கு விலை உயர்ந்த ஆடை அலங்காரங்கள் செய்யப்பட்டன.


அரசியல் நுழைவு


பழங்குடிகள் மற்றும் சூத்திரர்களின் கடவுளாக இருந்து, பின்னர், பிராமணிய சமயத்திற்கு இழுக்கப்பட்ட பிள்ளையார், இந்திய அரசியலிலும் நுழைந்தார். 1893-ஆம் ஆண்டில், மராட்டிய மாநிலத்தின் தலைநகரமான மும்பையில் பிள்ளையார் அரசியல் நுழைவு தொடங்கியது. இதே ஆண்டில் தான், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பாலகங்காதர திலகர், கணபதி உற்சவ நிகழ்வை மாற்றி அமைத்தார். மராட்டிய மாநிலத்தில் விநாயக சதுர்த்தி எனப்படும் பிள்ளையாரின் அவதார நாள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா முடிந்த பின்னர், களிமண் அல்லது சுடு மண்ணாலாகிய விநாயகர் உருவத்தைத் தனியாகவோ அல்லது, அருகிலுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்தோ சென்று கடலில் போட்டுவிட்டுத் திரும்புவர்.இதுவரை, தனித்தனியாக, விரும்பிய நேரத்தில், விரும்பிய நாளில் பிள்ளையாரின் உருவத்தைக் கடலில்போடச் சென்ற மராட்டிய மக்கள், ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஊர்வலமாகச் சென்று, கடலில் கரைக்கும் புதிய முறையைப் பாலகங்காதர திலகர், 1893-ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவ்வூர்வலம் புறப்பட்டுச் செல்லும் வழியில், ஆங்காங்கு மக்கள், இந்த ஊர்வலத்தோடு இணைந்து கொண்டனர். இதனால், இது ஒரு பிரம்மாண்டமான மத ஊர்வலமாக உருவானது. இந்திய விடுதலை இயக்கத்தை மதத்துடன் பிணைக்கும் செயலைத் தீவிர தேசியவாதம் பேசிய திலகர் உருவாக்கினார். இதனால் தான், தீவிர தேசியவாதத்தை, ‘சமய தேசியம்’ என்று நேரு அழைத்தார். தேசிய இயக்கத்தின் போக்கிற்கு மிகவும் தீமை பயக்கும் முறையில் அரசியல் தீவிரவாதத்தையும் சமூகப் பிற்போக்குத் தனங்களையும் இணைக்கும் நடவடிக்கைகள் இந்தக் காலக் கட்டத்திலிருந்து தான் தொடங்கின. அதன் நீட்சி தான், வி.டி. சாவர்க்கர் உருவாக்கிய ‘இந்து மகா சபை’ என்கிற மத அடிப்படைவாத அமைப்பும், அதன் தொடர்ச்சி தான் ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங்தள் போன்ற சங்பரிவாரக் கும்பல்களும், தமிழ்நாட்டில் ‘இந்து முன்னணி’என்னும் பெயரில் உருவான இந்து மத அடிப்படைவாத இயக்கமும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


தமிழ்நாட்டில்...


1983- 84 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரத யாத்திரைகள் என்னும் பெயரில் இந்து மத அடிப்படைவாதம் மிகஎளிதாக, சாமானிய மக்களைச் சென்றடைந்தது. ஞான ரதம், புனித கங்கைத் தீர்த்தம் அடங்கிய ரத யாத்திரை, சக்தி ரதம் போன்ற பெயர்களால் ரத யாத்திரைகள் நடந்தன. ராமர் கோவில் கட்டுவதற்காக, தமிழ்நாடு உட்பட, இந்தியா முழுவதிலுமிருந்தும் அயோத்திக்கு எடுத்துச் செல்லும் செங்கல் ஊர்வலம் அளித்த ஊக்கத்தின் அடிப்படையில் இந்து முன்னணியினர், 1990-ல் பிள்ளையார் ஊர்வலத்தைத் தமிழகத்தில் துவக்கினர். தமிழ்நாட்டில் பிள்ளையார் ஊர்வலம் செல்லும் பாதைகளையும் அது முடிவடையும் இடங்களையும் ஊன்றிக் கவனித்தால், மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்துவதும், ஆத்திர மூட்டுவதுமே ஊர்வல அமைப்பாளர்களின் நோக்கமாக இருப்பதைக் காணலாம். சென்னையில் திருவல்லிக்கேணிப் பகுதி, குமரி, நெல்லை மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்கள் மற்றும் தூத்துக்குடி, இராமநாதபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பிள்ளையார் ஊர்வலப்பாதைகளை சூழ்ச்சித்திட்டத்துடன் உருவாக்குவதைக் காண முடியும்.


மத வெறியர்களின் கையில் பிள்ளையார்


பிள்ளையாரின் உருவ அமைப்பு, அதை நிறுவுதல் ஆகியவற்றை வெளித் தோற்றத்தில் பார்த்தால், அந்தப் பகுதி மக்கள் திட்டமிடுவதாகக் காட்சியளிக்கும். ஆனால், உண்மையில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புகள் தான் பிள்ளையார் ஊர்வலத்தைத் திட்டமிடுகின்றன. நாட்டில் பல்வேறு சமயத்தினர் வாழ்கின்றனர். ஒவ்வொரு சமயத்தினரும் சமய அடிப்படையிலான ஊர்வலங்களை ஆங்காங்கே வீதிகளில் நடத்துகின்றனர். தேரோட்டம், சப்பர ஊர்வலம் ஆகியன சைவ, வைணவ ஆலயங்களின் பாரம்பரிய சிறப்பு வாய்ந்த அம்சங்களாகும். இவற்றின் தாக்கத்தினால், கத்தோலிக்க சமயத்தினரும் கூட தேர்ப் பவனியையும் சப்பர ஊர்வலத்தையும் இன்று வரை பின்பற்றி வருகின்றனர். இஸ்லாமியர்களின் முகரம் ஊர்வலமும் தர்க்காக்களில் நிகழும் சந்தனக் கூடு ஊர்வலமும் இன்று வரை தமிழ்நாட்டில் பல பகுதிகளில் நடந்து வருகின்றன. இவை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. பிற சமயத்தினர் மீது, எவ்விதக் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலும் பிள்ளையார் ஊர்வலம் என்றுபிற மத எதிர்ப்பை மையமாகக் கொண்டே உருவாக்கப்படுகிறது. பிள்ளையார் ஊர்வலம் சிறுபான்மையினருக்கு எதிராகத் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட ஓர் இயக்கம் என்பதற்கு 1991-ஆம் ஆண்டு, சென்னையில் இவர்கள் நடத்திய பிள்ளையார் ஊர்வலத்தில் மத வெறுப்பைக் கக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், 1996-ஆம் ஆண்டில், மீண்டும் சென்னையில் இவர்கள் நடத்திய பிள்ளையார் ஊர்வலத்தில் எழுப்பிய முழக்கங்களும் சான்றாகும். தமிழ்நாட்டில் சிவன், விஷ்ணு, முருகன், பார்வதி, லெட்சுமி என மேல்நிலைப்படுத்தப்பட்ட தெய்வ வழிபாடுகளும், மதுரைவீரன், காத்தவராயன், கருப்புசாமி, அண்ணன்மார்சாமி, சுடலைமாடன், இசக்கி - இப்படியான பல்வேறு வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றுள்ள கிராமியத் தெய்வ வழிபாடாகிய நாட்டார் தெய்வ வழிபாடுகளும் வழக்கத்தில் உள்ளன. இதனால், ஒரு தெய்வ அடையாளத்தின் அடிப்படையில் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவது எளிதான காரியமல்ல. பன்முகத்தன்மை வாய்ந்த வழிபாட்டு முறைகள் நிலவும் தமிழகத்தில் சைவர், வைணவர், நாட்டார் தெய்வ வழிபாட்டினர் ஆகிய மூன்று தரப்பினரும் வழிபடும் தெய்வமாகப் பிள்ளையார் காட்சியளிக்கிறார். சுருங்கச் சொன்னால், மேல்தட்டு மக்களையும் அடித்தள மக்களையும் இணைக்கும் கடவுளாகப் பிள்ளையாரை இந்து மத அடிப்படைவாதிகள் கண்டறிந்துள்ளனர். அனைத்துத் தரப்பிடமும் பரவலாக அறிமுகமாகியுள்ள ஓர் எளிய தெய்வம் பிள்ளையார். இருக்கும் இடம் அல்லது, அந்தந்த வட்டாரத்துடன் பிள்ளையார் மிக எளிதாக இணைந்து விடுவார். உச்சிப்பிளையார், ஆற்றங்கரைப் பிள்ளையார், குளத்தங்கரைப் பிள்ளையார், முச்சந்திப் பிள்ளையார், சுகம் தரும் விநாயகர், நீதிவிநாயகர், ஏழைப்பிள்ளையார், போக்குவரத்து விநாயகர் என, இவரை ஏதாவது ஓர் அடைமொழி இட்டு, மிக எளிதாக மக்கள் தங்களுடன் இணைத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் இந்து வகுப்புவாதத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்காக வீரவிநாயகர் உருவாக்கப்பட்டார். அத்வானியின் ரத யாத்திரையின் போது, ராமருக்குப் புதிய உருவம் என்று, இவர்களால் உருவாக்கப்பட்டது. வழக்கமான படங்களில் இராமர் அமைதியாகவும் கருணை உணர்வோடும் காட்சியளிப்பார். ஆனால்,இவர்கள் உருவாக்கிய இந்தப் புதிய ராமரோ, எதையோ அழிப்பதற்காக வில், அம்போடு ரதத்தில் செல்வது போல் காட்சியளித்தார். ஒரு சில இடங்களில் இராமர், திரிசூலம்,கோடரி போன்ற ஆயுதங்களைக் கூட ஏந்தியுள்ளார். ராமர் வழிபாடு செல்வாக்கு பெற்றுள்ள வட இந்தியாவில் எவ்வாறு கோபங்கொண்ட முகத்தோடு ராமர் அறிமுகப்படுத்தப்பட்டாரோ, அதேபோல, ராமர் வழிபாடு செல்வாக்குப் பெறாத தமிழ்நாட்டில் அதற்கு மாற்றாக, இவர்கள், தேடிக் கண்டுபிடித்த வெகுஜனக் கடவுள் தான் பிள்ளையாராகும். மோதகமும் மாம்பழமும் பிடித்திருந்த பிள்ளையார் கையில் வாள் ஏந்த வைத்தார்கள். சென்னையில் சில இடங்களில் விநாயகர் கையில் ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்த வைத்துள்ளனர். அணுகுண்டைக் கையில் ஏந்திய ‘பொக்ரான் விநாயகர்’ அறிமுகப்படுத்தப்பட்டார். கார்கில் யுத்தத்தின் போது, ‘கார்கில் விநாயகர்’ உருவாக்கப்பட்டார். இப்படி ஏதாவது ஒரு வகையில், அமைதியாகக் காட்சியளித்த பிள்ளையார் ஆயுதபாணிப் பிள்ளையாராக்கப்பட்டார். வெகு ஜனங்களின் மதப்பற்றையும் மத நம்பிக்கையையும் மதவெறியாக மாற்றும் வழிமுறைகளில் ஒன்று தான், பிள்ளையார் பக்தர்களை மதவாதிகளாக மாற்றும் பிள்ளையார் ஊர்வலமாகும். பாரம்பரியமான சமய ஊர்வலங்கள் பக்தியை மட்டுமல்லாமல், மகிழ்ச்சி ஆரவாரம், சுற்றுலா, பொழுது போக்கு, உறவினர்கள் நண்பர்களைச் சந்தித்து மகிழ்தல் இவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அவ்வாறு தான், மாங்கனியும் கொழுக்கட்டையும் ஏந்தி, ஆலயங்களில் நாற்சந்தி, முச்சந்திகளிலும் குளத்தங்கரை, ஆற்றங்கரைகளிலும் அரச மரத்தடிகளிலும் வீற்றிருந்து, மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார் பிள்ளையார். அவரை வைத்து அடிதடி, கல்வீச்சு, கத்திக்குத்து, தீவைப்பு, துப்பாக்கிச் சூடு இவற்றை உருவாக்கும் மதவெறிக் கும்பல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


கட்டுரையாளர் : 

நாகை மாலி

சிபிஐ(எம்) நாகை மாவட்டச் செயலாளர், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி தமிழில் indian national pledge in tamil

தமிழர் வரலாறு மற்றும் தமிழர்கள் தோற்றம் series 12

சோமநாதர் ஆலய மிதக்கும் சிவலிங்கம்