அமைதியான பிள்ளையார் ஆயுதம் ஏந்தியது எப்படி? நாகை மாலி
பிள்ளையாரின் தோற்றம் குறித்துத் தமிழக மக்களிடம் ஏராளமான, சுவாரசியமான கதைகள் உண்டு.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இப்படிப்பட்ட கதைகளையெல்லாம் கேட்டு மகிழ்வர். இவ்வாறான ரசனைக்குரிய ஒரு தெய்வம் தான் பிள்ளையார்.தென் மாவட்டங்களில் கரிசல் நிலப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்யாவிட்டால், வெட்ட வெளியில் இருக்கும் பிள்ளையார் சிலை மீது, மிளகாய்வற்றலை அரைத்துப் பூசி விடுவார்கள். சில இடங்களில்,சாணியைக் கொழகொழவென்று கரைத்துப் பிள்ளையார் சிலை மீது ஊற்றி விடுவார்கள். மிளகாய் வற்றல் பூச்சையோ அல்லது சாணிக் கரைசலையோ போக்குவதற்காகப் பிள்ளையார் மழையை வரவழைப்பார் என்ற நம்பிக்கையில், இத்தகையச் செயலை கிராம மக்கள் செய்வர். மழை பெய்யும் வரை, இப்பூச்சுகள் பிள்ளையார் மீது அப்படியே படிந்திருக்கும்.சில இடங்களில் பிள்ளையாரைக் குப்பைக் குழியில் புதைத்து வைப்பார்கள். மழை வந்த பிறகே புதைத்த பிள்ளையாரை வெளியில் எடுப்பார்கள். சில இடங்களில் கிணற்றுக்குள் போட்டுவிடுவார்கள். மழை பெய்தால் தான் வெளியில் எடுப்பார்கள். மக்கள் தங்களுக்கு நெருக்கமானவராகப் பிள்ளையாரைக் கருதினார்கள். அதனால், மிகுந்த உரிமையுடன் இப்படிப்பட்...